Thursday, November 04, 2004

கபீர் சொல்கிறான்... - மீனாட்சிசங்கர்

தக்ஷிண் பாரத் இந்திப் பிரச்சார் சபையின் மூலம் நான்கு ஆண்டுகள், எட்டு தேர்வுகள் எழுதி நான் இந்தி மொழி கற்றுக் கொண்ட புண்ணியத்தில் பல நல்ல இந்தி மொழிப் படைப்பாளிகளின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பிரேம்சந்த், ஹர்வம்சராய் பச்சன், மைதிலி சரண் குப்தா என நீளும் அந்தப் பட்டியலில், எனக்கு மிகப் பிடித்தமானவன், கபீர் என்னும் கவிஞன், அல்ல அல்ல, சமூகப் போராளி. என்ன?
கவிஞன் என்றாலே சமூகப் போராளி தான் என்று சொல்கிறீர்களா, அதுவும் சரிதான்.'கபீர்,கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டஒரு நல்விதை.
சரியான நேரத்தில்,நல்லதொரு நிலத்தில்அவன்வீரியமாக விதைக்ப்பட்டான்!' என்று கபீரைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆம், அவனொரு வீரியமான விதை தான். அவன் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில், இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே நிலவி வந்த பூசல்களைக் கண்டு வெதும்பி, 'இறைவன் பெயரைச் சொல்லி இரண்டுபட்டுக் கிடக்கும் சமுதாயத்தை' மாற்றியமைக்கத் தன் சொல்லம்புகளை எய்தான். அது மட்டுமின்றி, போலியான மதச்சடங்குகளையும் தேவையற்ற நம்பிக்கைகளையும் களைந்து, ஆன்மீகம் என்பதை இறைவனை நாடிச் செல்லும் தூய பாதையாக அமைக்கவும் முற்பட்டான். தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் காசி மாநகரில் கழித்த கபீர், தன் இறுதிக் காலத்தில் காசியை விட்டு மஹாகர் என்ற இடத்திற்குச் சென்று விடுகிறான். 'காசியில் இறந்தால் தான் மோட்சம்' என்ற அக்கலத்து (இக்காலத்தும்) நம்பிக்கையைத் தான் நம்பவில்லை என்ற பிரகடனமே அவனது அந்தப் பயணம். அதைப் பற்றி எழுதிய ஒரு பாடலில்,'ஞானிகளே கேளுங்கள்,கபீர் சொல்கிறான்,வறண்ட மஹாகரும்காசிக்கு இணைதான்,இதயத்தில் இறைவனை நிரப்பிக் கொண்டோருக்கு'என்று உறுதியாக அறிவித்து விடுகிறான் கபீர்.'கபீர் சொல்கிறான்' என்று தன் பாடல்களில் அவ்வப்போது கூறிச் செல்வது கபீரின் தனிப்பட்ட ஒரு பாணியாகும்.

திருக்குறளைப் போல் இரண்டு வரிகளாலான 'தோஹா' என்ற இலக்கிய வடிவத்தினூடாகத்தான் கபீரின் கவிதைகள் எனக்கு அறிமுகமாகின. இருந்தாலும் என்னை மிகவும் கவ்ர்ந்தவை அவனது நீளமான பாடல்களே ஆகும். அவற்றில் தான் 'கபீர் சொல்கிறான்' என்ற பிரயோகமும் மிகுதியாக இருக்கும். இந்த இரு வார்த்தைகளை மிக இயல்பாகத் தன் பாடல்களில் அமைத்துப் பாடும்போது, கவிதையிலிருந்து வாசகனை அந்நியப்படுத்தி விடாமல் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும், 'கபீர் சொல்கிறான்' என்பதில் தான் எத்தனை எத்தனை சுவையான மாற்றங்கள்?! சில நேரம் அது நம் காதுகளில் ஆசானின் அறிவுரையாகக் கேட்கிறது. சில நேரம், ஆசை மிக்க காதலியின் கெஞ்சலாக. சில நேரம், சமூகப் பொறுப்பும் கோபமும் கலந்த தலைவனின் கட்டளையாக. இப்படி வாசகனைக் கவிதைக்குள் இழுத்து நனைய வைத்துப் பரவசப்படுத்துவதில் கபீர் திறமைசாலி.கபீரின் பிறப்பையும் வளர்ப்பையும் குறித்து இரு வித நம்பிக்கைகள் உள்ளன. சிலர், அவன் இந்து விதவைக்குப் பிறந்து, தள்ளி வைக்கப்பட்டு, இஸ்லாமியத் தம்பதியால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டான் என்று சொல்வார்கள். வேறு சிலர் இதை மறுத்து, அவன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து, வறிய சூழ்நிலையினால் குடும்பத்தைப் பிரிந்து, இந்துக் குடும்பத்தின் ஆதரவோடு வளர்ந்தவன் என்று சொல்வார்கள். எது எப்படியாயினும், அவன் இரு மதக் கலப்போடு இருந்திருக்கிறான் என்பதே உண்மை. ஆனால், இரண்டு மதங்களுமே, ஒரு கட்டத்தில் இறை நம்பிக்கையை விடுத்து, மதச் சடங்குகளின் பால் ஈடுபட்டு விட்டதைக் கண்டு உள்ளபடியே வருத்தம் கொள்கிறான் கபீர். இம்மதச் சடங்குகளின் அடிப்படையிலேயே பிரிவினை அடைந்து சண்டையிட்டுக் கொள்வதையும் வெறுத்தான். ஒரு பாடலில்,'கடைவீதி வியாபாரி,வாடிக்கையாளர் முன்னால்சரக்கனைத்தையும் விரிப்பது போலபிரபஞ்சம் முழுவதிலும்இறைவன் படர்ந்து நிரம்புகிறார்.ஆனால்,ஒரு கூட்டம் எரிக்கிறது,ஒரு கூட்டம் புதைக்கிறது,எனக்குப் பிடிக்கவில்லை,நான் என் இரு வீடுகளையும் துறந்தேன்.'என்று சொல்கிறான். அவன் பாடிவிட்டுப் போனது அவன் வாழ்விலேயே நடந்ததாக நம்புமாறு ஒரு கதை வழங்கப்படுகிறது. கபீருக்கு இரு மதத்தைச் சார்ந்த சீடர்களும் இருந்தனர். கபீர் மரணமடைந்த பிறகு அவர்களுக்குள் சண்டை மூண்டது. கபீரின் உடலுக்கு தங்கள் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து எரிக்க வேண்டும் என்றனர் இந்து சீடர்கள். கபீரின் உடலுக்குத் தங்கள் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடத்திப் புதைக்க வேண்டும் என்றனர் இஸ்லாமிய சீடர்கள். அப்போது அதிசயிக்கத்தக்க வகையில் கபீரின் உடல் மலர்களாக மாறியதாகவும், இரு மதத்தைச் சார்ந்த சீடர்களும் அவற்றைத் தமக்கிடையே பிரித்துக் கொண்டதாகவும் அந்தக் கதை தெரிவிக்கிறது.கடவுள் = உள் + கட. தனக்கு உள்ளெ கடந்து சென்று ஆன்மாவின் மூலத்தில் இறைத்தன்மையைக் கண்டறிவதே ஆன்மீகத்தின் உண்மைத் தத்துவம் என்பதில் கபீருக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. கவிஞர் சேவியர், ஒரு கவிதையில்,'புனிதப் பயணம் என்பதுநாம் செல்வதல்ல,நமக்குள் செல்வது'என்று அழகாகக் குறிப்பிடுவார். கபீரும் இத்தகைய சிந்தனையைத் தன் பாடல்களில் அங்கங்கே தூவிச் செல்கிறான். ஒரு பாடலில்,'இந்துக்களுக்குக் கோவிலிலும்இஸ்லாமியர்களுக்கு மசூதியிலும்இறைவன் உறைகிறார்,ஆட்சி புரிகிறார்.கபீர் கேட்கிறான்,எங்கு கோவில் இல்லையோ,எங்கு மசூதி இல்லையோ,அங்கு இறைவனே இருப்பதில்லையோ?'என்று கேள்வி எழுப்புகிறான். இறைவனுக்கான இல்லத்தைத் தத்தம் இதயத்தில் காணச் சொல்லி அறிவுறுத்துகிறான். தனக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களை ஆணித்தரமாகக் கண்டிக்கவும் கபீர் தயங்குவதே இல்லை. தயவு தாட்சண்யம் பார்ப்பது இல்லை.'பண்டிதரே!நீர் சொல்வதுஎத்தனை பெரிய புளுகு?இராமநாமத்தைஜெபிப்பதால் மட்டுமேசுவர்க்கம் கிட்டி விடுமோ?கபீர் சொல்கிறான்,சர்க்கரை என்று சொல்வதால் மட்டுமேவாய் இனித்து விடுமோ?'என்று கேட்கும் அவன் பாடலே இதற்கு நல்லதொரு சான்று.கபீர் எனக்குப் பலமுறை பாரதியை நினைவு படுத்தியிருக்கிறான். கண்ணனை விதவிதமாகப் பாடிப் பரவசமடைந்த பாரதியைப் போலவே கபீரும், பரம்பொருளுக்கும் தனக்கும் இடையில் பலவிதமான உறவுமுறைகளைச் சிருஷ்டித்துக் கொண்டு தன் பாடல்களின் மூலம் ஒரு தெய்வீக நிலையைத் தொடுகிறான். இறைவனைத் தாயாகவும், தன்னைச் சேயாகவும் நினைத்து அவன் பாடி உருகும் ஒரு பாடல்:' தாயே ஹரி! நான் உன் மகன்.என் பாவங்களிலிருந்து எனக்கு விடுதலையளி.மகன் அவ்வப்போது தவறிழைத்தாலும்தாயின் இதயத்தில் அவை தங்குவதில்லை.அவளின் முடிபிடித்திழுத்துவலி ஏற்படுத்தினாலும்அனையின் அன்பு குறைவதில்லை.ஒன்று மட்டும்கபீர் நிச்சயமாகச் சொல்வான்,குழந்தை வருத்தத்தில் தவிக்கும் போதுஅன்னையானவள்அதை விட அதிக வருத்தத்தில் துடிப்பாள்.'கடைசி வரியில் எத்தனை ஆழமான உண்மையை எத்தனை அநாயாசமாகச் சொல்லிவிடுகிறான்? மனிதன் துயரில் உழலும் போது அதைக் கண்டு இறைவனும் மிக்க துன்பத்தில் அமிழ்ந்து பரிதவிப்பான் என்பதை மிக எளிமையாகவும் சொல்லி விடுகிறான் கபீர்.கடவுளையும் தன்னையும் காதலன் - காதலியாகப் பாவித்து அவன் பாடும் பாடல்கள் அமரத்துவம் மிக்கவை. அவற்றில் அவனது அன்பின் ஆழம் புலப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்று:'பிரியமானவரே,வீட்டுக்குத் திரும்பி வாருங்கள்.உங்களைப் பிரிந்து வாழும் வாழ்க்கை,துன்பத்தின் சரித்திரமாகவே உள்ளது.என்னை உங்கள் மனைவியென்றுஎல்லோரும் கொண்டாடுகிறார்கள்.ஆனாலும்நாம் ஒன்றாக இல்லாவிடில்இந்தக் காதலால் என்ன பயன்?உணவுக்கு என்னைப் பிடிக்கவில்லை.தூக்கமோ பல மைல் தூரத்தில்நான் காணாதபடி ஒளிந்து கொண்டுள்ளது.வீட்டின் உள்ளேயும் வெளியேயும்எவ்வித அமைதியும் இல்லை.காமாந்தகாரனுக்குக் காமத்தைப் போலவும்தாகமிக்கவனுக்கு நீரைப் போலவும்நீங்கள் எனக்கு.என் துன்பங்களைஉங்களிடம் தூது சொல்லகருணை மிக்கவர்கள் யாருமேயில்லையா?கபீர் சொல்கிறான்,என் ஆசை ஹரியைநான் காணத் தறிவிட்டால்நான் இறக்கவும் கூடும்.'இனொரு பாடல் உண்டு. இறைவனுடைய காதலின் இன்பத்தில் மூழ்கி நிலை மயங்கித் தடுமாறும் ஒரு மனிதனின் உணர்வுகளை அதில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறான் கபீர்.'கடவுளின் அம்புகள்மிகக் கூர்மையானவை.யாரை அவை தாக்குமோ,அவர்களே அதன் வலி அறிவார்கள்.ஆனால்,கபீருக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.அம்புகளின் காயத்தைஉடலெங்கும் மனமெங்கும்எங்கு தேடியும் கானவில்லை.மருந்தை நான் எங்கு தடவுவேன்?'இப்படியாக நிகழும் உறவில் ஒரு மாற்றம். இப்போது இறைவன் எஜமான். கபீர் அவருக்குப் பணியாள். அப்போது நடைபெறும் ஒரு காட்சி:'நான் பாதி வழி மட்டுமே வந்திருக்கிறேன்,உன் தரிசனம் கிடைப்பதெப்படி?உன் தரிசனம் கிடைக்காமல்நான் மகிழ்ந்து திளைப்பதெப்படி?இறைவனே சொல்லிவிடு,நம்மில் யாரிடம் உள்ளது குறை?நான் மோசமான பணியாளா,நீ பொறுப்பற்ற எஜமானா?மூவுலகத்தின் அதிபதியே,கபீர் சொல்கிறான்,என்னை உன்னிடம் அழைத்துக் கொள்.அல்லது,உன்னை என்னிடம் அழைத்து வா.உன் தரிசனத்தை எனக்குத் தா.'பாடலின் துவக்கத்தில் எஜமானாக அறிவிக்கப்படுவது யார், பாடலின் இறுதியில் எஜமானைப் போல் கட்டளையிடுவது யாரென்று பாருங்கள். கபீருக்குப் பரம்பொருளுடனான நெருக்கத்தை உறுதியாக அறிவிக்கும் பாடலாக விளங்குகிறது இது.கபீரின் மதம் அன்பு மட்டுமே. அறியாமை இருளின் ஆழத்தில் தவித்த மக்களிடையே வெளிச்சத்தின் தூதுவனாக வந்தவன் கபீர். அன்பு, அறிவு ஆகிய வெளிச்சங்களைச் சுமந்து வந்து மானுடத்தின் சுதந்திரத்துக்குப் பாடுபட்டான் கபீர். இறைவனின் அம்சம் ஒவ்வொரு இதயத்துக்கு உள்ளும் இருப்பதாக நம்பியவன் கபீர். 'இரு மூச்சுக்களுக்கிடையிலான வெறுமையிலும்' பரம்பொருளே நிரம்பியிருப்பதாக அவன் கூறுகிறான். ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும் போதும் இந்த செய்தி நம்மை வந்தடைகிறது. ஆனால் உறக்கத்திலிருக்கும் நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை. நம்மைக் கண்விழிக்கச் செய்வதே கபீரின் முயற்சி. ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் சொல்வார்: 'அலைந்து திரியும் ஆன்மாவுக்கு அன்பு தான் வழிகாட்டும் நட்சத்திரம்' என்று. கபீரின் பாடல்களுக்கும் அதுவே அடிப்படை.'நான் காகிதமும் மையும் தொட்டதில்லை.என் கரங்கள்பேனாவைப் பிடித்ததில்லை'என்று கபீர் ஒரு பாடலில் கூறுவதை, 'அவன் எழுதப்படிக்கத் தெரியாதவன்' என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்வதுண்டு. உண்மையில் இறைவனின் உண்மைப் பொருளை அறியாமல் புனித சாத்திரங்களைப் படித்தும் எழுதியும் பிரசங்கம் செய்தும் வாழ்பவர்களுக்கு எதிரான குரலே அது.'கபீர் சொல்கிறான்,நாடியில் உணரப்படாத எதுவும்நம்பத்தக்கது அல்ல.'என்பது கபீரின் அறைகூவல். அதுவே அவன் இறுதி வரை கடைப்பிடித்த கொள்கை.இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத கர்நாடகாவிலும் கூட கபீருக்கு கோவில் ஒன்று இருப்பதைக் காணும் போது கபீர் சொன்ன செய்தியின் பரப்பும் விரிப்பும் புரிகிறது. அவன் சிறப்பும் புலப்படுகிறது. ஒரு விமர்சகர் சொன்னதைப் போல் 'கபீரின் பாடல்கள், எல்லா மனிதரக்ளுக்கும் எல்லாமுமாக இருக்க வல்லவை.' இறுதியாக, கபீரின் சித்தாந்தத்தை எளிமையாக வெளிப்படுத்தும் பாடலோடு நிறைவு செய்கிறேன்:'மாலையின் நிழல் இருளாக நீள்கிறது,உடலையும் மனதையும்அன்பு மட்டுமே வெல்கிறது.நீங்கள் உங்கள் ஜன்னல்களைத் திறவுங்கள்.அன்பின்எல்லையற்ற வெளிக்குள் குதியுங்கள்.ஞானமென்ற தாமரையின்தேனைக் குடித்துகாதலின் அலைகளை அரவனைத்துக் கொள்ளுங்கள்.சாது சகோதரர்களே கேளுங்கள்,கபீர் சொல்கிறான்,நான் பரம்பொருளைஎனக்குள்ளே கண்டறிந்தேன்.'கபீர் சொல்வதை நாமும் காது கொடுத்துக் கேட்போம். கேட்டுத் தெளிவோம்.!குறிப்புகள்:1. கபீரின் கவிதை மேற்கோள்கள், எனது சொந்த மொழிபெயர்ப்பு2. மூலப் பாடல்களுக்கு ஆதாரம்: தக்ஷிண் பாரத் இந்திப் பிரச்சார் சபாவின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றவை, மற்றும், கபீர் கவிதைத் தொகுப்பு (வெளியீடு: தீப் & தீப் நிறுவனம், புது தில்லி.)3. சிற்சில பாடல்களில், மூலத்தில் 'ராம்' என்று குறிப்பிடப்படுகிறது. கபீரின் கொள்கைகளின் அடிப்படையில், அதைத் தமிழில் 'கடவுள்' அல்லது 'இறைவன்' என்றே மொழிபெயர்த்துள்ளேன்.

0 Comments:

Post a Comment

<< Home